×

கடந்த அதிமுக ஆட்சியில் நட்சத்திர ஓட்டல்களில் சொத்து வரியை 50 சதவீதம் வரை குறைத்து முறைகேடு: குழு அமைத்து விசாரணை நடத்த கே.கே.நகர் தனசேகரன் வலியுறுத்தல்

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில், நட்சத்திர ஓட்டல்களில் சொத்து வரி 50 சதவீதம் வரை குறைத்து முறைகேடு நடந்தது குறித்து குழு அமைத்து விசாரிக்க வேண்டும், என்று மாநகராட்சி கூட்டத்தில் கே.கே.நகர் தனசேகரன் பேசினார். சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நேற்று ரிப்பன் மாளிகையில் நடந்தது. கூட்டத்தில், நேரமில்லா நேரத்தில், கணக்கு நிலைக்குழு தலைவர் கே.கே.நகர் தனசேகரன் பேசியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் சொத்து வரி ஏய்ப்பு நடந்தது தொடர்பாக கணக்கு மற்றும் நிலை குழுவிற்கு பல புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. அதிலும், சென்னையில் இயங்கி வரும் நட்சத்திர ஓட்டல்களின் சொத்து வரி ஏய்ப்பு குறித்து பல புகார்கள் பெறப்பட்டன. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட ஓட்டல்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டும், இதுவரை தணிக்கை குழுவிற்கு உரிய பதில் அளிக்கவில்லை. இருந்தும், புகாரில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் ஆய்வு செய்ததில் கடந்த அதிமுக ஆட்சியில் குறிப்பிட்ட சில நட்சத்திர ஓட்டல்களின் சொத்து வரிகள் கிட்டதட்ட 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த ஓட்டல்களில் அறைகள் குறைத்து காட்டப்பட்டுள்ளது.

மேலும், அறை வாடகை தொகையை மிகவும் குறைத்து காட்டிவிட்டு, அந்த ஓட்டலின் இணையதளத்தில் அறையின் குறைந்தபட்ச வாடகையானது பல மடங்கு அதிகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த அதிமுக ஆட்சியில் பல கோடி ரூபாய் மாநகராட்சியின் வரி வருவாயில் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகளை ஒரு குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும். குறைத்து வசூலிக்கப்பட்டவர்களின் சொத்துகளை மறு சீராய்வு செய்து அவற்றின் வரி ஏய்ப்பு தொகையை அபராதத்துடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பல துரிதமான நடவடிக்கைகள் மூலம் நிலுவை வரிகள் வசூலிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் பல தனியார் பள்ளிகள் அனுமதி பெறாமல் பல கட்டிடங்கள், ஆடிட்டோரியம், நீச்சல் குளங்கள் கட்டியுள்ளன. இது குழந்தைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஆய்வு செய்து முறையாக கட்டிட அனுமதியும், சொத்து வரியும் போடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். தற்போது கோடைகாலம் என்பதால் சென்னை மக்களின் குடிநீர் தேவையை உடனுக்குடன் கையாள சென்னை குடிநீர் வாரியம் மற்றும் கவுன்சிலர்கள் கொண்ட ஒரு இணைப்பு குழுவை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post கடந்த அதிமுக ஆட்சியில் நட்சத்திர ஓட்டல்களில் சொத்து வரியை 50 சதவீதம் வரை குறைத்து முறைகேடு: குழு அமைத்து விசாரணை நடத்த கே.கே.நகர் தனசேகரன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : KK Nagar Thanasekaran ,AIADMK ,Chennai ,KK Nagar ,Thanasekaran ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி